Friday, 6 June 2014

ஆட்டுக்கறி சாம்பார் - தாளிச்சா

ஆட்டுக்கறி சாம்பார் - தாளிச்சா


  • ஆட்டிறைச்சி - 300 கிராம்
  • கத்திரிக்காய் - 5
  • உருளைக்கிழங்கு - 4
  • கேரட் - 3
  • பச்சை மிளகாய் - 5
  • தக்காளி - 3
  • பெரிய வெங்காயம் - 1
  • துவரம் பருப்பு - 200 கிராம்
  • கறி மசாலா - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய் பூ - ஒரு கப்
  • புளி - எலுமிச்சை பழ அளவு
  • உப்பு - 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • ஏலக்காய் - 4
  • எண்ணெய் - கால் கப்
  • கிராம்பு - 2
  • பட்டை - பாதி
  • மல்லி தூள் - கால் கப்


கத்திரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் நான்கு துண்டுகளாக நறுக்கவும். காரட்டை வட்டமாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும். தக்காளியை 4 துண்டுகளாக நறுக்கவும்.


செய்முறை



தேங்காயை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். மாங்காய் கிடைக்கும் காலங்களில் மற்ற காய்களுடன் மாங்காயையும் துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். தாளிச்சாவில் மாங்காய் சேர்த்தால் நல்ல சுவையுடன் இருக்கும். கறியை சற்று பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும்.


குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டுப் பொரிக்கவும்.


பிறகு நறுக்கின வெங்காயம் போட்டு அரை நிமிடம் வதக்கி, அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.


அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு மேலும் அரை நிமிடம் வதக்கவும்.


பின்னர் நறுக்கி வைத்துள்ள கறித் துண்டங்களைப் போட்டு மசாலாவுடன் சேரும்படி பிரட்டி விடவும்.


பருப்பை கழுவி சுத்தம் செய்து அத்துடன் சேர்க்கவும். நறுக்கிய பாதியளவு தக்காளியை போட்டு கிளறவும்.


பிறகு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி உப்பு, கொத்தமல்லி போட்டு கிளறி விடவும். (கறி, பருப்பு இரண்டும் வேகும் அளவு தண்ணீர் சேர்க்கவும்.)


குக்கரை மூடி வைத்து, அடுப்பை சிம்மில் வைத்து 3 விசில் வரும் வரை வேக விடவும்.


3 விசில் வந்த பிறகு குக்கரை இறக்கிவிடவும். கறி நன்கு வெந்திருக்க வேண்டும்.


இப்போது அடுப்பில் ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை போட்டு அதில் கறி மசாலா, மல்லித் தூள் சேர்க்கவும்.


அதனுடன் வேக வைத்த கறி மசாலாவை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி கிளறி, பின்னர் மூடி அடுப்பில் வைத்து சுமார் 8 நிமிடங்கள் கொதிக்க விடவும்.


புளியுடன் தண்ணீர் ஊற்றி ஒரு கப் அளவிற்கு திக்கான புளிக்கரைச்சலாக எடுத்துக் கொள்ளவும். புளி கரைசலுடன் அரைத்த தேங்காயை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.


காய் நன்கு வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை குழம்பில் சேர்க்கவும்.


ஒரு கொதி வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விடவும். கறிவேப்பிலையை கொத்தாக போடவும்.


சுவையான தாளிச்சா ரெடி. நெய் சோறு அல்லது பிரியாணியை தயாராக வைத்து இருக்கின்றீர்களா? சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள்.



ஆட்டுக்கால் சால்னா(பாயா)


  • ஆட்டுக்கால் - 2 செட்
  • வெங்காயம் - 2 (பெரியது)
  • தக்காளி - 2 (பெரியது)
  • இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  • மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
  • மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
  • சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
  • எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது
  • பச்சை மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
  • முந்திரி பருப்பு - 8
  • மைதா - 2 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு


 வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரையை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரி பருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.

செய்முறை



ஆட்டுக்காலை வக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இல்லையெனில் வக்கிய ஆட்டுக்காலே கடையில் கிடைக்கிறது.


சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்


.


ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.


கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்.


கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.


சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.


பின்பு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்.



சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி





குடல் கத்திரிக்காய்


  • ஆட்டுக்குடல் - மீடியம் சைஸ் 1
  • கத்திரிக்காய் - கால் கிலோ
  • துவரம் பருப்பு அல்லது கடலைப்பருப்பு - 100 கிராம்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
  • தக்காளி - 2
  • வெங்காயம் -2
  • பச்சை மிளகாய் - 2-3
  • மல்லி, கறிவேப்பிலை - சிறிது
  • சில்லி பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
  • மல்லி பவுடர் - 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் - அரைஸ்பூன்
  • மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
  • எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • தேங்காய் - 4 டேபிள்ஸ்பூன்


 செய்முறை



  • குடலை பக்கெட்டில் தண்ணீர் வைத்து மூன்று நான்கு முறை தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும். பின்பு சிறிய பாக்கெட் சுண்ணாம்பு குடலில் தடவி துணிதுவைக்கும் அல்லது மீன் உரைக்கும் கல்லில் வைத்து நன்கு உரைத்து கழுவவும். பின்பு வெந்நீரில் அலசி அரிவாள்மனை கொண்டு துண்டு போடவும். உட்புறம் இருக்கும் கொழுப்பை எடுத்து விடவும்.
  • வெங்காயம், தக்காளி, மல்லி இலை, கத்திரிக்காய் கட் செய்து வைக்கவும். தேங்காய் அரைத்து வைக்கவும்.
  • குக்கரில் அரிந்த குடல் துண்டுகள், மஞ்சள் தூள், சில்லி பவுடர் அரைஸ்பூன், மல்லி பவுடர், சீரகத்தூள், ஊற வைக்காத அலசிய பருப்பு இஞ்சி பூண்டு 1 டீஸ்பூன் ,2 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். விசில் வந்தவுடன் குறைத்து அரை மணிநேரம் வைக்கவும். உப்பு போடக்கூடாது. வெந்து விடும்.
  • வெந்ததை தனியாக எடுத்து வைக்கவும். பின்பு குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் வதக்கி,1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, மல்லி, கறிவேப்பிலை, மிளகாய், தக்காளி உப்பு, 1 டீஸ்பூன் சில்லி பவுடர், கத்திரிக்காய் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வைக்கவும்.
  • பின்பு அத்துடன் வேக வைத்த குடல், பருப்பு சேர்க்கவும். அரைத்த தேங்காய் விடவும். உப்பு சரி பார்த்து சிம்மில் வைத்து தேங்காய் வாடை அடங்கியதும் இறக்கவும்.
  • சுவையான குடல் கத்திரிக்காய் ரெடி. இதனை ப்ளைன் சாதத்தில் வீட்டு சாப்பிடலாம். ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம்.
கீறி முட்டை


  • முட்டை - 4
  • வெங்காயம் - 1 மீடியம் சைஸ்
  • தக்காளி - 1 மிகச்சிறியது
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்.
  • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 ஸ்பூன்
  • சீரகத்தூள் - அரை ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு
  • கறிவேப்பிலை - 2 இணுக்கு


 செய்முறை


  • முட்டையை அவித்துக்கொள்ளவும். முட்டையின் நான்கு பக்கமும் கீறி விட்டுக்கொள்ளவும், முட்டை முழுதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக கட் பண்ணிகொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, உப்பு போட்டு மசிய விட வேண்டும்.
  • பின்பு மிளகு, மல்லி, சீரகம், மஞ்சள்தூள் வகைகளை சேர்த்து சிம்மில் வைத்து மசாலா வாடை அடங்கியவுடன் கீறிய முட்டையை போட்டு பிரட்டி வைக்கவும்.
  • சுவையான கீறி முட்டை ரெடி.